India
-Nantha Kumar R
கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் இனி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படாது என்று அங்கு ஆட்சி செய்யும் பாஜக அரசு அறிவித்துள்ளது. அசாமில் சட்டவிரோதமாக குடியேறி ஆதார் கார்டு பெறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அசாமில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். இந்நிலையில் தான் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக அசாமில் சட்டவிரோதமாக குடியேறிபவர்களை தடுத்து நிறுத்துவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன்பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சட்டவிரோதமாக அசாமில் குடியேறுபவர்கள் ஆதார் அட்டை பெறுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் இநு்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார்.
இதுபற்றி முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ”18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டாம் என்று அசாம் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்கள் எவருக்கும் ஆதார் அட்டை கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பழங்குடியினர் (ST), பட்டியலினத்தவர் (SC) மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மார்ச் 2027 வரை ஆதார் அட்டை வழங்கப்படும். வரும் 2027 ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த தடை முழுமையாக அமலுக்கு வரும். அதன்பிறகு தேயிலை தோட்டம் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
இருப்பினும், தவிர்க்க முடியாத அசாதாரண சூழ்நிலைகளில் ஆதார் அட்டை வழங்குவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர் வழியாக மாநில அரசுக்கு கோரிக்கையாக வைக்க வேண்டும். மாநில அரசு ஆய்வு செய்து தகுதியானவர் என்றால் ஆதார் அட்டை வழங்கும். அதேவேளையில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைகள் தொடர்ந்து வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.