தற்போது நாடு முழுவதும் மாம்பழ சீசன் ஆகும். எங்கும் மாம்பழங்களாக இருக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஜுனா கட்டிவாடா என்ற கிராமத்தில் அபூர்வ வகை மாமரங்கள் வளர்கின்றன.
நூர்ஜஹான் என்ற அந்த மாம்பழ மரங்களை கிஷன் பரத்ராஜ்சிங் என்பவர் தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். ஆப்கானை பூர்வீகமாகக் கொண்ட நூர்ஜஹகான் மாமரக்கன்றுகளை கிஷன் தந்தை குஜராத்தில் இருந்து எடுத்து வந்து வளர்த்து வருகிறார். ஒவ்வொரு பழமும் 2 முதல் 5 கிலோ எடைகொண்டதாக இருக்கும். ஒரு பழத்தை வெட்டினாலே ஒரு குடும்பம் சாப்பிட முடியும்.
இந்த மாம்பழத்திற்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் நூர் ஜஹான் மாம்பழங்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), சவுதி அரேபியா, கத்தார் மற்றும் குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் இந்திய பிரீமியம் மாம்பழங்களுக்கு அதிக தேவை உள்ளது.
இது தவிர, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களும் இந்த மாம்பழங்களை விரும்புகின்றனர்.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இவற்றுக்குச் சிறப்பான தேவை உள்ளது.
இந்த மாம்பழங்களின் உற்பத்தி குறைந்து வருவதால், அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. தற்போது கிஷன் தோட்டத்தில் 9 மரங்கள் இருக்கின்றன. 9 மரங்களிலும் காய்கள் வந்துவிட்டன. இது தவிர 11 மரக்கன்றுகளை ஒட்டுக்கட்டுதல் முறையில் உருவாக்கி வேறு இடங்களில் நடவு செய்துள்ளார்.
கிஷனைப் பார்த்து அப்பகுதியில் உள்ள சிலர் இதே மாங்கன்றுகளை நடவு செய்து பார்த்தனர். ஆனால் எதுவும் சரியாக வரவில்லை. எனவேதான் கிஷன் தோட்டத்தில் விளையும் மாம்பழத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
இதையடுத்து யாராவது பிடுங்கிச்சென்றுவிடுவார்கள் என்ற பயத்தில் 9 மரத்திற்கு 11காவலர்கள் எந்நேரமும் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும், ஒரு மரத்திற்கு ஒருவர் வீதம் 9 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளே வேறு மனிதர்கள் அல்லது பறவைகளைக்கூட உள்ளே வரவிடாமல் தடுத்து வருகின்றனர். கிஷன் தனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை விற்பனை செய்ய பொதுமக்களிடம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்கிறார்.
உலகின் மிகப்பெரிய மாம்பழமாகக் கருதப்படும் நூர்ஜஹான் அதன் கவர்ச்சியான நிறம், தனித்துவமான நறுமணம் மற்றும் இனிப்பு சுவை ஆகியவை இதைப் பிரபலமான மாம்பழமாக்குகின்றன. அதனால்தான் முதல் பார்வையில் மக்களை ஈர்க்கிறது.
இந்த நூர்ஜஹான் வகை மாம்பழம் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்தது. குஜராத் வழியாக மால்வா மற்றும் ஜபுவா-அலிராஜ்பூர் பகுதியை அடைந்தது. முகலாயர் காலத்தில், அரச குடும்பங்களின் தோட்டங்களில் பெரிய அளவு மற்றும் தனித்துவமான சுவை கொண்ட மாம்பழங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது.