நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் 5 வயது சிறுமி ஃபபியானா கபெல்லோ உயிரிழந்த வழக்கில், அவரது தாய் ஃபிரான்சிஸ் கபெல்லோ (32) மீது இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. “நானே என் மகளைக் கொன்றுவிட்டேன்’ எனத் தாயே 911 அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுக்கையறையில் நடந்த அதிர்ச்சி
அக்டோபர் 14-ம் தேதி மாலை, சவுத் ரிச்மண்ட் ஹில் பகுதியில் உள்ள வீட்டின் படுக்கையறையில் சிறுமி ஃபபியானா மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ‘நானே என் மகளைக் கொன்றுவிட்டேன்’ என அவரது தாயார் ஃபிரான்சிஸ் கபெல்லோ, 911 அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர் காவல்துறையினர். மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
பிரேத பரிசோதனையில் முகத்தில் காயங்களும், கண்கள், இதயம், நுரையீரல் பகுதிகளில் சிறிய ரத்தக்கசிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவை மூச்சுத்திணறலால் ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநலப் பிரச்னையும் நீதிமன்ற நடவடிக்கையும்
ஃபிரான்சிஸுக்கு ஏற்கெனவே மனநலப் பிரச்னைகள் இருந்ததாகவும், அவர் சமீபத்தில் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது தந்தை ஃபிராங்க்ளின் கபெல்லோ தெரிவித்துள்ளார். அவர் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளாமல் நிறுத்தியிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
எனினும், அவரது மனநல நிலைக்கும் இந்தச் சம்பவத்துக்கும் இடையிலான நேரடித் தொடர்பை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அக்டோபர் 16-ம் தேதி குயின்ஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஃபிரான்சிஸுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தந்தையின் வேதனை
மகளின் இறுதிச்சடங்குச் செலவுகளுக்காகப் பொதுமக்களிடம் நிதியுதவி கோரியுள்ளார், இந்திய வம்சாவளியான ஃபபியானாவின் தந்தை குல்தீப் சிங். வாடகை வாகனத்தில் ஊபர் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் அவர், மகளை இழந்த துயரத்தோடு கடுமையான பொருளாதாரச் சுமையையும் எதிர்கொண்டு வருகிறார்.