கடன் வாங்கி சூதாட்டம்; ரூ.4 லட்சம் இழப்பு – கடனை அடைக்க குடும்பத்தையே கொன்று கொள்ளையடித்த வாலிபர் | Loss of Rs. 4 lakh in online gambling: A man commits triple murder of a family to pay off his debts.

Spread the love

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் பகுதியில் உள்ள துலியாஜனில் வசித்து வந்தவர் சந்திரகாந்தா. இந்தியன் ஆயில் கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற சந்திரகாந்தா தனது மனைவி எலிசா மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை ராஜு தாஸ் என்பவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். ராஜு தாஸ் சந்திரகாந்தாவிற்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரகாந்தா மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போய் இருந்தது. வாடகைக்கு இருந்த ராஜு காணாமல் போய் இருந்தார். இதையடுத்து ராஜுவை போலீஸார் தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்கு பிறகு அவரும், அவரது கூட்டாளியும் சிமலுகுரி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சந்திரகாந்தா வீட்டில் கொள்ளையடித்த பொருட்களுடன் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ் மூலம் பெங்களூரு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இரண்டு பேரும் கொலை சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் கூடி பேசி கொலைக்கு சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று தெரிய வந்தது. மேலும் இது குறித்து போலீஸார் கூறுகையில்,”‘ 30 வயதான ராஜு, தனது தந்தையிடம் கடன் வாங்கிய ரூ.4 லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அதைத் தொடர்ந்து கடனை அடைப்பதற்காக கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். விசாரணையில், ராஜு மற்றும் அவரது கூட்டாளி அமீர்தாஸ் ஆகியோர் கொடூரமான கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் மூன்று பேரையும் இரும்பு கம்பி மற்றும் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளனர். முதலில் எலிசா புயானையும், பின்னர் மகளையும், இறுதியில் சந்திரகாந்தாவையும் கொன்றதாக தெரிவித்துள்ளனர்”என்றார். காலை 8.30 மணிக்கு சந்திரகாந்தா வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் பிற்பகல் 12.15 மணி வரை இருந்து மூன்று பேரையும் கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *