அரசு தரப்பில், “கருணைப் பணியை பொறுத்தவரை சில வழிகாட்டுதல்கள் உள்ளன. வயது, கல்வி என தகுதியின் அடிப்படையிலேயே வழங்க வேண்டும். அவ்வாறு தான் கரூர் சம்பவ அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதை எப்படி எதிர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை” என தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “அரசுப் பேருந்து விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கினால் எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்து நிகழும் சூழலில், அவர்களுக்கு அரசுப் பணி கோரினால் என்ன செய்வது?
வேலைவாய்ப்பிற்காக பலரும் காத்திருக்கிறார்கள். அது குறித்து டின்பிஸ்சி விவரங்களைத் தரும் என எண்ணினோம். ஆனால், அரசாணை கருணைப் பணி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய அதன் ஒப்புதல் பெற விலக்களித்துள்ளது தெரியவந்தது.
திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே? அது இவ்வாறு பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும்.
அரசுத்தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக் கூறுவதை ஏற்க இயலாது. எப்பணியும் சாதாரண பணி அல்ல. அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணியே.
எனவே கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து செய்யப்படுகிறது” எனக் கூறி உத்தரவிட்டனர்.