சரி நம்ம புள்ள எதோ ஒரு டீ கடையிலயோ, எங்கனயாவது வேல பார்த்துட்டு திரும்பி வந்துருவான்னு நெனச்சேன். ஆனா அதுக்கு அப்பறம் எந்த தகவலும் இல்ல. தினமும் ரோட்ல யாராவது படுத்திருந்தா நம்ம மகனா தான் இருக்கும், சோறு இல்லாமல் இருப்பான்னு ஆவலோடு ஓடி போய் பார்ப்பேன். ஆனா அவனாக இருக்கமாட்டான். அதனால் தேடுறதையே கைவிட்டுட்டேன். எங்காவது உயிரோடு தான் பிரகாசம் இருப்பான்னு மனச தேத்திக்கிட்டேன்” என்றார்.
பின் கொரோன காலத்தில் தனது கணவரை இழந்த சுந்தரிக்கு மீண்டும் தனது மகன் நியாபகம் சுழல ஆரம்பித்தது.
எங்காவது உயிரோடிப்பான் என்று தன்னை தேற்றிக்கொண்டார். பின் பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் பார்டரில் உள்ள அஜ்னாலா எனும் ஊரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரகாசம் கொத்தடிமையாக இருந்தது தெரிய வந்தது.
பஞ்சாப் மாநிலம், பட்டியாலவில் உள்ள “அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி’ என்கிற தொண்டு நிறுவனம் அவரை மீட்டதாக சுந்தரிக்கு தெரிவிக்கப்பட்டது. பின் பத்திரிகையாளர் ஒருவரின் உதவியின் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உதவியின் மூலம் சுந்தரி பஞ்சாப் சென்றார். அங்கு பிரகாசத்தை கட்டியணைத்து அழுத தாயிடம் அவர் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார். பின்னர் கோவைக்கு அழைத்து வந்தனர்.
நம்மிடையே சுந்தரி பேசியதாவது :
“அவன் உயிரோடுதான் இருக்கிறான் என்று கேட்டவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவன சங்கிலியால கட்டிப்போட்டு வச்சிருந்தாங்கனு சொன்னது ரொம்ப கோபமாகவும் வருத்தமாவும் இருந்துச்சு. 16 வயசுல போனான், அப்போ பண்ண முடியாதத இப்போ நல்ல துணி வாங்கி குடுத்து நல்ல சாப்பாடு செஞ்சு குடுக்கணும். அவனை இனி நல்லா பாத்துக்கணும்” என்று கூறினார்.
அவர் சகோதரர் பிரபு பேசியதாவது :
“பிரகாசம் இவ்ளோ நாள் இல்லாம இருந்தது, ரொம்ப கவலையா இருந்துச்சு. அவன் திரும்ப கெடச்சது, சந்தோஷமாக இருக்கு. சின்ன வயசுல அண்ணனுக்கு எதுமே பண்ணுனதில்லை. இப்போ நான்தான் அவனுக்கு எல்லாமே பண்ணனும். ஊருக்கு போய் நண்பர்களை காட்டனும், கோவில்களுக்கு சுற்றுலாத் தலங்களுக்கு அவன கூட்டிட்டு போய் சுற்றி காட்டணும்” என்று எதிர்கால விஷயங்களை பற்றி கூறினார்.