Cricket
oi-Yogeshwaran Moorthi
லண்டன்: தி ஹன்ட்ர்ட் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹ்மத் ஒப்பந்தம் செய்யப்பட்டது சர்ச்சையாகியது. தற்போது தி ஹன்ட்ர்ட் லீக் தொடங்கி நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹ்மத் ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து காவ்யா மாறன் பேசாமல் அமைதி காத்துள்ளார். இது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வந்த தி ஹன்ட்ரட் லீக் தொடரில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்திருக்கின்றனர். அந்த வகையில் லீட்ஸ் அணியை ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் வாங்கியுள்ளார். லண்டன் அணியை மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி வாங்கி இருக்கிறார். இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 99 பந்துகளில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய எம்ஐ லண்டன் அணி 84 பந்துகளில் இலக்கை எட்டியது. சிறப்பாக ஆடிய சாம் கரண் 39 பந்துகளில் 60 ரன்களையும், பூரன் 22 பந்துகளில் 58 ரன்களையும் குவித்தனர். இந்தப் போட்டியை பார்க்க சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் நேரில் வந்திருந்தார்.
இதன் மூலமாக சன்ரைசர்ஸ் அணி வசம் 3 அணிகள் இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் மற்றும் எஸ்ஏ லீக்கில் சன்ரைசர்ஸ் அணி முதலீடு செய்திருந்த நிலையில், தற்போது ஹன்ட்ரட் லீக்கிலும் முதலீடு செய்திருக்கிறது. இதுதொடர்பாக காவ்யா மாறனிடம் பேசுகையில், சன்ரைசர்ஸ் அணியில் வெற்றிக்கு தேவையான அத்தனை வீரர்களும் இருக்கின்றனர். அடிப்படைகளை சரியாக செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
அப்போது அப்ரார் அஹ்மத்தை ரூ.2.45 கோடிக்கு வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காவ்யா மாறன், பதில் அளிக்காமல் கடந்து சென்றார். பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹ்மத் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே இந்தியாவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தரப்பில் எந்த வீரரும் புறக்கணிக்கப்பட கூடாது என்று அறிவித்தனர்.
அதற்கேற்ப பாகிஸ்தான் வீரர்களுக்கும் ஹன்ட்ரட் லீக்கில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. ஐபிஎல் உரிமையாளர் பலரும் பாகிஸ்தான் வீரர்களை வாங்குவதில் தயக்கம் காட்டினர். ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் எந்தவித தயக்கமும் இல்லாமல் அணிக்கு தேவையான வீரரான அப்ரார் அஹ்மத்தை வாங்கினார்.