தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் முத்துமாலை. இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசுடைமை வங்கியில் மேலாளராகப் பணிபுருந்து வந்தார். இவரும் இவரது கணவர் சங்கரும் வங்கித் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் ஒன்றாகப் படித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவருக்குமான கருத்து வேறுபாட்டினால் சங்கர், நீதிமன்றம் மூலம் முத்துமாலையிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

பின்னர், சென்னல்பட்டியிலுள்ள பெற்றோரின் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்த முத்துமாலை, தினமும் பேருந்தில் பாளையங்கோட்டையில் உள்ள வங்கிக்கு சென்று வந்தார். இந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தியாராஜநகரிலுள்ள ஒரு வீட்டில் தனது மகளுடன் முத்துமாலை குடியேறினார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பைக்கில் இரவு சுமார் 9 மணியளவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கினை வழிமறித்த இரண்டு பேர் அவரை தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக பைக்கினை கீழே போட்டுவிட்டு வீட்டை நோக்கி ஓடியுள்ளார் முத்துமாலை.
இருவரும் முத்துமாலையை விரட்டிச் சென்றுள்ளனர். அவரின் வீட்டின் முன்பு முத்துமாலையின் மகளின் கண் முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில், முத்துமாலை உயிரிழந்தார். இரவில் நடந்த கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் மற்றும் பெருமாள் புரம் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முத்துமாலையை நடத்தை சந்தேகத்தில் அவரது தம்பி பன்னீர்செல்வம், அவரது நண்பர் சிவா ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், “கொலை செய்யப்பட்ட வங்கி மேலாளரான முத்துமாலை, சென்னல்பட்டியிலுள்ள அவரது பெற்றோரின் வீட்டில் வசித்தபோது அதேபகுதியிலுள்ள அவரது சித்தியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது சித்தி வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த நாங்குநேரி அருகேயுள்ள ஆழ்வாநேரியைச் சேர்ந்த இளைஞருக்கும், முத்துமாலைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இதனை முத்துமாலையின் பெற்றோர் மற்றும் சித்தியின் குடும்பத்தினர் கண்டித்தனர். ஆனாலும், அவருடனான பழக்கத்தை முத்துமாலை கைவிட மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முத்துமாலையின் தம்பி பன்னீர்செல்வம், அவரது நண்பர் சிவா என்பவருடன் சேர்ந்து முத்துமாலையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இந்த கொலைச்சம்பவத்திற்கு மூளையாக முத்துமாலையின் சித்தி மகன் இசக்கிப்பாண்டி என்பவர் செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முத்துமாலையை கொலை செய்ய வேண்டும் என பன்னீர்செல்வம் முடிவு செய்த நிலையில், கடந்த ஒருவாரமாக மாலை முதல் இரவு வரை முத்துமாலை எங்கு, எப்போது செல்கிறார்.வீட்டிற்கு எப்போது வருகிறார் என்பதை நோட்டமிட்டு பன்னீர்செல்வத்திற்கு உடனுக்குடன் செல்போனில் தகவல் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் இசக்கிப்பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் மற்றும் சிவாவை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்” என்றனர்.