13 வயதில் மூளைக் காய்ச்சலால் உடல் பாதிப்பு… உழைப்பால் குடும்பத்தை முன்னேற்றும் கோவை காமராஜின் வாழ்க்கைப் பயணம்
கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் வெளியே தினமும் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என பலரும் வந்து செல்லும் இடத்தில் சிறிய கடை ஒன்றில் ஆனியன் பஃப்ஸ் விற்பனை செய்து வருகிறார் காமராஜ். வருபவர்களுடன் புன்னகையோடு பேசிக்கொண்டே வியாபாரம் செய்து வரும் அவரைப் பார்த்தால், அவருக்குப் பின்னால் இவ்வளவு பெரிய வாழ்க்கைப் போராட்டம் இருக்கும் என்பதை எளிதில் யாராலும் உணர முடியாது.
1975-ஆம் ஆண்டு பிறந்த காமராஜின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது, அவர் 13 வயதில் ஏற்பட்ட மூளைக் காய்ச்சல். அந்த நோயால் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, கையை முழுமையாக விரிக்க முடியாமலும், வேகமாக நடக்க முடியாமலும் போனது. இந்தச் சூழல் வாழ்க்கையை நிறுத்திவிடும் காரணமாக மாறியிருக்கக்கூடும். ஆனால் காமராஜுக்கு அது ஒரு முடிவாக இல்லை.
1989-இல் கோவைக்கு வந்த காமராஜ், குடும்பத்தை நடத்த பல்வேறு வேலைகளைச் செய்தார். அரசு வேலைக்கும் முயற்சி செய்தார்; வாய்ப்பு அமையவில்லை. பின்னர் தன்னால் முடிந்த தொழிலைத் தேர்ந்தெடுத்து சிறிய அளவில் உணவு விற்பனையைத் தொடங்கினார். இன்று ஆனியன் பஃப்ஸ் விற்பனையே அவரது முக்கிய வாழ்வாதாரம். விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், 5 பஃப்ஸ்களை ₹20-க்கு விற்று வருகிறார். தினமும் சுமார் ₹600 மதிப்பிலான விற்பனை நடைபெறுகிறது.