தவெகவில் இணைந்ததும் பதவி; ஒன்றரை ஆண்டுகளில் எம்.எல்.ஏ! – கள்ளக்குறிச்சி அருள்விக்னேஷ் பின்னணி என்ன ?

Spread the love

அ.தி.மு.க தன்னுடைய கோட்டையாகக் கருதும் தொகுதிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி. தன்னுடைய வலுவான வாக்கு வங்கியால் 2011, 2016, 2021 என தொடர்ச்சியாக தொகுதியை தக்க வைத்து வந்தது.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ராஜீவ்காந்தியும், தி.மு.க கூட்டணி சார்பில் வி.சி.க-வைச் சேர்ந்த மாலதியும், நா.த.க சார்பில் நாகம்மாளும், த.வெ.க சார்பில் அருள் விக்னேஷும் களம் கண்டனர். த.வெ.க புதிய கட்சி என்பதால், வாக்குப் பதிவு நடைபெற்ற அன்றைய தினம் வரை களம் அ.தி.மு.க – வி.சி.க என்ற நிலையில்தான் அனைவராலும் பார்க்கப்பட்டது.

முதல் பத்து சுற்றுகள் வரை அ.தி.மு.க-வும், வி.சி.க-வும் மாறி மாறி முன்னணியில் இருந்த நிலையில், மூன்றாவது இடத்தில் வந்து கொண்டிருந்தார் அருள் விக்னேஷ். அதன்பிறகு இருவரையும் பின்னால் தள்ளி முன்னேறிய அவர், 81,132 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 798 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜீவ்காந்தியை வீழ்த்தினார் அருள் விக்னேஷ்.

தவெக விஜய்

தவெக விஜய்

சின்னசேலம் ஒன்றியம் மூங்கில்பாடி கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட அருள் விக்னேஷ், தற்போது கள்ளக்குறிச்சி கச்சிராப்பாளையத்தில் வசித்து வருகிறார். முதுகலைப் பட்டம் முடித்த இவர், கள்ளக்குறிச்சியில் டென்னிஸ் விளையாட்டு மைதானம் வைத்து நடத்தி வருகிறார்.

வேட்பு மனுவில் ரூ.1.2 கோடி சொத்து மதிப்பை காட்டியிருக்கும் இவர், 43.5 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். விஜய் த.வெ.க-வை தொடங்கியவுடன் கட்சியில் இணைந்து மாவட்ட மாணவரணி பதவியைப் பெற்ற அருள் விக்னேஷ், அதே வேகத்தில் கள்ளக்குறிச்சி தொகுதியில் சீட்டையும் பெற்றார்.

கட்சியில் சீனியர்கள் இருந்தும் அருள் விக்னேஷுக்கு பதவியும் சீட்டும் உடனே கிடைக்கக் காரணம், அவரது பொருளாதார பலம். அ.தி.மு.க-வும், வி.சி.க-வும் அசுர வேகத்தில் பிரசாரத்தை முன்னெடுத்த நிலையில், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை த.வெ.க தரப்பு. நகர்ப்புறங்களில் கூட பெரிதாக பிரசாரத்திற்குச் செல்லவில்லை. ஆனாலும் விஜய் அலை இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *