திருப்பனந்தாள், குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்: நீங்காத புகழ் கிடைக்க அருளும் தலம்! | kumbakonam kurichi kothandaramar temple

Spread the love

வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய நான்கு மாதங்களையும் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பார்கள். ஆயுள் விருத்தி, நோய் நிவர்த்தி, சத்புத்திரபிராப்தி, விவாகபிராப்தி ஆகியவற்றைத் தரக்கூடிய இப்புண்ணிய காலத்தில் இவ்வாலயத்தில் வழிபட்டு பலனடைந்தவர்கள் ஏராளம் என்கின்றனர்.

புராணக் காலத்தில் இப்பகுதி நெல்லி மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இங்கு அன்னை மகாலட்சுமி தவமிருந்ததாக ஐதிகம். எனவே இத்தலமானது `லட்சுமிபுரம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல திருமகளின் அம்சமான நெல்லி விருட்சம் தோன்றியதும் இத்தலத்தில்தான் எனவும் ஒரு தகவல் உண்டு.

நெல்லிமரம் என்பது திருமாலின் அம்சம். எனவேதான் நெல்லிக்கனி லக்ஷ்மியானவள் விருப்பத்துடன் உறையும் பொருள் ஆயிற்று என்கின்றன மறைநூல்கள். நெல்லிமரத்திற்கும் துளசிச்செடிக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்து கொண்டாடும் வழக்கம் உண்டு. இத்தகு சம்பிரதாயம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த தலம் இதுதான் என்கிறார்கள் இங்குள்ளவர்கள்.

குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்

குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்

தம்முடைய அவதாரத்திற்கும் முன்பிருந்தே தம்மை ராமநாம ஜபத்தினால் வழிபட்டுக் கொண்டிருந்த தங்க மந்தாரைக் கொக்குகளுக்கு ஶ்ரீராமர் இத்தலத்தில்தான் பெயர் சூட்டி அருளியிருக்கிறார். தவிர, அனுமன் வேண்டியதற்கு இணங்கி, ராமபிரான் வானரர்களுக்கு தனது திருக்கரங்களால் காதணிகளை அணிவித்து அருளியதும் இந்தத் தலத்தில்தான்.

எனவே இத்தலத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், காது குத்துதல் முதலான வைபவங்களை நிகழ்த்தினால் அவர்களின் வாழ்வு வளம் பெறும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

இந்த ஆலயதைப் பற்றிய ஏராளமான செய்திகள் அடங்கிய சுவடிச் செய்திகளைத் தொகுத்து `லட்சுமிபுர மகாத்மியம்’ என்ற நூலாகவும் வெளியிட்டு இருக்கிறார்கள். மிகப் பழைமையான அந்த நூலினைச் சமீபத்தில்தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கடந்த 1999-ல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலம் இந்நூல் வெளியிடப்பட்டு உள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

முழுக்க முழுக்க செங்கல் திருப்பணியால் ஆக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான கோயில் இது. பெரிய ராஜகோபுரம், உயர்ந்த மதில் சுவர்கள் மற்றும் இரண்டு திருச்சுற்றுகளுடன் கூடிய பாரம்பர்யமான கோயில் இது. தற்போது, மகிமை மிக்க இந்த ஆலயத்தின் திருப்பணி நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்பிருப்பவர்கள் அங்கு சென்று வழிபடுவதோடு திருப்பணிகளிலும் கலந்துகொள்ளுங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *