ஆன்மிகப் பணியோடு இணைந்து மிகச்சிறப்பான முறையில் தமிழுக்கும் தொண்டாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121 பிறந்தநாள் விழா, வேலூர் காங்கேயநல்லூரில் உள்ள அவரின் ஞானத்திருவளாகத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், வாரியார் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
வாரியாரின் வாழ்க்கை வரலாறு:
திருமுருக கிருபானந்த கிருபானந்த வாரியார் 1906-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகிலுள்ள காங்கேயநல்லூர் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை சிவத்திரு மல்லையதாச பாகவதர். தாய் மாதுஸ்ரீ கனகவல்லியம்மையார். இவர்களின் பதினோரு பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தவர் தான் வாரியார்.
இவரது தந்தையார் இசையிலும், இயலிலும் மாபெரும் புராண வல்லுநர். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த வாரியார் கல்வி, இசை, இலக்கியங்களை கற்றுக்கொண்டு தனது 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றார். தனது 12-வது வயதில் பதினாராயிரம் பண்களை கற்று 18-வது வயதில் சிறப்பாக சொற்பொழிவாற்றும் ஆற்றல் உடையவராக திகழ்ந்தார்.

தனது 19-வது வயதில், அமிர்தலட்சுமி அம்மையாரைத் திருமணம் புரிந்தார். தனது 23-வது வயதில் சென்னை யானைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் 4 ஆண்டுகள் வீணை பயிற்சி மேற்கொண்டார். முருக பக்தரான கிருபானந்த வாரியார், நாள்தோறும் ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதையும் வழக்கமாக்கியிருந்தார்.
சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன் மற்றும் இசை போன்ற பலத்துறைகளிலும் ஆழ்ந்த புலமைப் பெற்றவர். தனியாக புராண பிரசங்கங்கள் செய்யவும் தொடங்கினார். வாரியாரின் பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தினால் பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார்.