முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஆரம்பமே அதிரடிதான்! இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, 44 பந்துகளில் 68 ரன்கள் குவித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஜெர்சி நம்பர் 18 களமிறங்கினாலே பாகிஸ்தான் அணியை பந்தாடுவது வழக்கமாகிவிட்டது.
மந்தனாவுடன் சேர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.
பேட்டிங்கில் கலக்கிய இந்திய அணி, 171 ரன்களை டிஃபெண்ட் செய்யும் பொறுப்பை பந்துவீச்சாளர்களிடம் கொடுத்தது. ஆரம்பத்தில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த பாகிஸ்தான் பேட்டர்கள், அடுத்த 68 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள்.
இதற்கு முக்கியக் காரணம் தீப்தி சர்மாவின் மாயாஜால சுழற்பந்துவீச்சுதான். அவர் வீசிய 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதன் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் தீப்தி சர்மா.
பேட்டிங்கில் மந்தனாவின் அதிரடி, பந்துவீச்சில் தீப்தியின் சாதனை என முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி, தொடரை மாஸாகத் தொடங்கியிருக்கிறது இந்திய மகளிர் அணி!