துரைமுருகன் இல்லத் திருமண சர்ச்சை….சுப.வீரபாண்டியனுக்கு எதிராகக் திரும்பிய நெட்டிசன்கள்! – Kumudam

Spread the love

திமுக பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனின் பேத்தியும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், திரைப்படத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி – தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவிக்கும் சென்னையில் நவம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஆனால், இந்தத் திருமணத்தில் பின்பற்றப்பட்ட வைதீகச் சடங்குகளும், சமஸ்கிருத மந்திரங்களும் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

துரைமுருகன் வீட்டு திருமணத்தில் வலித்த இதயம்!

திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், துரைமுருகனின் இல்லத் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலித்ததற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

துரைமுருகனின் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், “தனது பெருமதிப்பிற்குரியவரும், தன்னிடம் பேரன்பு காட்டுபவருமான திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டது தனது இதயத்தை இப்போதும் வலிக்கச் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்”.

அவரது இந்தப் பதிவு திமுக மற்றும் திராவிட இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது.

சுப.வீரபாண்டியனுக்கு எதிராகத் திரும்பிய கேள்விகள்!

ஆனால், சுப.வீரபாண்டியனின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராகவும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்து சமயச் சடங்குகள், வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரிய சம்பிரதாயங்களை எதிர்ப்பது ஏன்? ஒருவர் தனது குடும்ப நிகழ்வை எந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை விமர்சிப்பது சரியா? என்ற ரீதியில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இந்து சமயச் சடங்குகளைப் பின்பற்றுவது தனிநபர் மற்றும் குடும்பத்தின் விருப்பம் சார்ந்தது என்றும், அதனை அரசியல் கொள்கையுடன் இணைத்துப் பார்ப்பது தேவையற்றது என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

சுயமரியாதைத் திருமணம் நடத்தாதது தவறா?

மறுபுறம், பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான திராவிட இயக்கம், சாதிய ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் பார்ப்பனிய ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுயமரியாதைத் திருமணங்கள் மற்றும் இணையேற்பு விழாக்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திமுகவின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் துரைமுருகனின் குடும்பத் திருமணத்தில் தாலி கட்டுதல், சமஸ்கிருத மந்திரங்கள் உள்ளிட்ட வைதீகச் சடங்குகள் பின்பற்றப்பட்டிருப்பது குறித்து சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், இதே விவகாரத்தில் சுப.வீரபாண்டியன் முன்வைத்த விமர்சனத்தையே சிலர் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். இந்து சமயச் சடங்குகளைப் பின்பற்றுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை இல்லையா? திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் தங்களது குடும்ப நிகழ்வுகளையும் அதே முறையில் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.

ஒருபுறம், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கும் அதன் முக்கியத் தலைவர்களின் குடும்ப நிகழ்வுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. மறுபுறம், தனிநபர்களின் மத மற்றும் குடும்ப விருப்பங்களில் தலையிடக் கூடாது என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

துரைமுருகன் வீட்டு திருமணத்தில் ஒலித்த சமஸ்கிருத மந்திரங்கள் ஏற்படுத்திய விவாதம், தற்போது சுப.வீரபாண்டியனின் கருத்துகளையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் திராவிடக் கொள்கை, இந்து சமயச் சடங்குகள், தனிநபர் உரிமை எனப் பல்வேறு கோணங்களில் விவாதம் தொடர்ந்து வருகிறது.

https://www.facebook.com/100044385941056/posts/1694741758682006/?rdid=qDGXVbMykMIdtIjC#

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *