தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை தி.மு.க-வின் நிலைப்பாடு ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாட்டிற்கு எள்ளளவும் பாதிப்பு வரக்கூடாது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டிற்கு இருக்கின்ற தற்போதைய 7.18% பிரதிநிதித்துவம் அப்படியே தொடர வேண்டும். இதற்காகக் கடந்த மார்ச் மாதமே தென்னக முதல்வர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் சிறப்புக்கூட்டம் நடத்தித் தீர்மானம் நிறைவேற்றியவர் எங்கள் தலைவர். ஆனால், வரலாறு தெரியாமல், வடமாநிலத் தலைவரின் கைப்பாவையாக இயங்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், அவசர அவசரமாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டினார்.
அந்தக் கூட்டத்தின்போதே நாங்கள் `காவிரியில் தண்ணீர் வரவில்லை, மேகதாதுவில் அணை கட்ட முற்படுகிறார்கள். எனவே, முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினோம். ஆனால், மேகதாது பற்றி எந்த முடிவும் எடுக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை மட்டும் வைத்து ஒரு தீர்மானத்தைப் போட்டார்கள்.
`தற்போதுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளை அப்படியே ‘ஃப்ரீஸ்’ (Freeze) செய்ய வேண்டும், தொகுதி மறுவரையறை கூடாது’ என்பதுதான் அந்தத் தீர்மானம். அதில் காவிரி நதிநீர் பற்றியோ, மேகதாது அணை குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசப்படவில்லை. தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.