த.வெ.க.வில் யார் கை ஓங்கும்? பர்வேஸ்–விஜயபாஸ்கர் மோதல் வெடிக்குமா? – Kumudam

Spread the love

புதுக்கோட்டை தவெகவில் சத்தமே இல்லாமல் ஒரு யுத்தம் நடக்கிறது. விஜய்க்காக நீண்ட காலமாக பணியாற்றிவரும் பர்வேஸை ஓரங்கட்டவே அ.தி.மு.க.விலிருந்து சி.விஜயபாஸ்கர் களமிறக்கப்பட்டிருக்கிறார் என்று கண்ணை கசக்குகிறது அமைச்சர் தரப்பு. இந்த பனிப்போர் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படையாக வெடிக்கலாம் என்று சொல்லப்படுவதுதான் புதுக்கோட்டை மாவட்ட பூகம்பம்!

சர்ச்சை 60) அரசியலுக்கு சற்றும் பஞ்சம் இல்லாதவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அதே மாவட்டத்தை சேர்ந்தவர் த.வெ.க.வை சேர்ந்த அமைச்சர் பர்வேஸ். ஒரே உறையில் இரண்டு கத்திகள்போல் ஒரே கட்சியில் இருவரும் இருந்தாலும், வெளியில் சிரிப்பும் உள்ளுக்குள் புகைச்சலுமாய் இருப்பதால்தான் இப்படி ஒரு டாக் கிளம்பியிருக்கிறது.

இதுகுறித்து, விபரமறிந்தவர்களிடம் பேசினோம். “முதல்வர் விஜய் நடிகராக இருந்தபோது, அவரது அரசியல் என்ட்ரிக்கு அடித்தளமிட்டவர் புதுக்கோட்டை மாஸ்கோ. மாவட்ட ரசிகர் மன்றத் தலைவரான இவர்தான் விஜய்யை முதன்முதலில் புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து ஏராளமானோரை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தினார். அந்த பொதுக்கூட்டத்தைப் பார்த்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2011 தேர்தலுக்கு தனக்கு ஆதரவளிக்கும்படி விஜய்யின் தந்தை சந்திரசேகரிடம் கேட்டுக்கொண்டார். அப்படிப்பட்ட மாஸ்கோவையே தனது பணிகளால் பின்னுக்கு தள்ளி, வந்தவர்தான் பர்வேஸ்.

இது ஒரு பக்கம் இருக்க, புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத அதிகாரப் புள்ளியாக வலம் வந்தவர் விஜயபாஸ்கர். உள்ளாட்சித் தேர்தல்களில் பிறக் கட்சிகளை நாமினேஷன் செய்யவிடாமல் தடுத்து தன் விசுவாசிக்கு பதவி பெற்றுக் கொடுத்தது, எதிர்க்கட்சி கவுன்சிலர்களை வளைத்து தனது கட்சியை ஜெயிக்கவைத்தது என அதிரடி காட்டியவர் இந்த விஜயபாஸ்கர்.

இதற்கிடையே, கடந்த 2011 – 2016 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பர்வேஸின் தந்தை ஜாபர் அலியை கைது செய்ய காரணமாக இருந்து, புதுக்கோட்டையையே பரபரப்புக்குள்ளாக்கினார் விஜயபாஸ்கர். இந்த கைது நடவடிக்கைதான் பர்வேஸ் மனதில், விஜயபாஸ்கர் மீதான பகை நெருப்பை பற்ற வைத்தது என இன்றும் புதுக்கோட்டை பகுதியில் பேசப்படுவதுண்டு.

முன்னதாக, விஜயபாஸ்கர் மீது குட்கா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில்தான் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைய காய் நகர்த்தினார்.

இவ்வாறு விஜயபாஸ்கர், கட்சியில் சேர முயன்றபோது விஜய்யின் நெருக்கமான ஆலோசகர்கள் சிலரிடமிருந்தும், விஜய்யின் நலம் விரும்பிகளிடமிருந்தும் ஊழல் வழக்கு தொடர்புடைய விஜயபாஸ்கரை கட்சியில் சேர்த்தால், தூய ஆட்சி என்று சொல்வதற்கு அர்த்தமே இல்லாமல் போகும். எனவே, அவரை கட்சியில் சேர்க்க வேண்டாம்’ என்று சொல்லப்பட்டது. இதை பர்வேஸ் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், விஜயபாஸ்கரின் இணைப்புக்கு அவர் முழு மனதாக சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இவ்வளவு சர்ச்சைகளையும் தாண்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 10,000 பேரோடு சென்னை சென்று பிரமாண்டமாய் விழா நடத்தி தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார் விஜயபாஸ்கர். இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் பேசும்போது, அமைச்சர் பர்வேஸை ‘மாப்பிள்ளை’ என பாசமாக அழைத்து பேசியது, அதுவரை நீடித்துவந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருந்தது. தொடர்ந்து, விஜயபாஸ்கருக்கு விராலிமலை தொகுதி மாவட்டச் செயலாளர் பொறுப்பும், மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பும் வழங்கியது தலைமை.

இந்த நிலையில், விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட ஒரு சிலருக்கு பதவி கொடுத்த தலைமை, மாவட்டத்திலிருந்து சென்ற சார்பு அணி நிர்வாகிகள் யாரையும் கண்டுகொள்ளவே இல்லை. சொல்லப்போனால் கூட்டங்களுக்குக்கூட அழைப்பு விடுப்பது இல்லை. த.வெ.க. ஆட்சியின் நூறு நாள் சாதனைக் கூட்டத்துக்குக்கூட அவர்களை கூப்பிடவில்லை எனும் புலம்பல் எழுந்திருக்கிறது. கூடவே, இதற்கெல்லாம் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பதில் சொல்லப்படும் என முணுமுணுக்கிறவர்களும் அதிகமாகி வருகிறார்கள்.

இதற்கேற்றார்போல் சமீபத்தில் இலுப்பூரில் நடந்த ஒரு விழாவில் பேசிய அமைச்சர் பர்வேஸ், ‘எனக்கு கொடுத்த பதவியைத்தான் விஜயபாஸ்கருக்கு விட்டுக் கொடுத்திருக்கிறேன் எனப் பேசியிருக்கிறார். இதற்கிடையே, விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் சிலர் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விஜயபாஸ்கரிடம் சென்று புலம்பியிருக்கிறார்கள். அப்போது அவர், ‘இடைத்தேர்தலில் நின்று ஜெயிக்கும்வரை அமைதியாக இருங்கள்’ என அவர்களை ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த தகவல்கள் எல்லாம் ஒருநாள் முதல்வர் விஜய்யின் கவனத்துக்குப் போகும். அப்போதுதான் புதுக்கோட்டை த.வெ.க.வில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி விழும்” என்கிறார்கள்.

அமைச்சர் பர்வேஸ் தரப்பில் பேசியவர்களோ, “அமைச்சர் பர்வேஸ், ஊழலில்லாத நிர்வாகத்தை கொடுக்க நினைக்கிறார். கடந்த காலங்களில் ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு போடப்பட்ட இடமாற்றங்கள் சமீபத்தில் அவரது துறையில் பத்து பைசா வாங்காமல் போடப்பட்டன. கட்சியினர் கேட்பதையும் உடனுக்குடன் செய்து கொடுக்கிறார்.

ஆனால், ஊழல் வழக்கு தொடர்புடைய விஜயபாஸ்கர், கட்சிக்கு வந்ததுடன், அமைச்சர் தரப்பை ஆதிக்கம் செய்ய நினைக்கிறார். கட்சியின் பிற பதவிகளில் இருப்பவர்களை தனது பணசெல்வாக்கால் வளைத்து, பர்வேஸை ஓரங்கட்ட திட்டமிடுகிறார். கட்சித் தலைமையில் முக்கியமான ஒருவரை வளைத்துவிட்டதாக மாவட்ட நிர்வாகிகளிடம் சொல்லியே பர்வேஸை ஒதுக்க நினைக்கிறார். இப்படி மாற்றுக் கட்சியிலிருந்து வரும் இவரை போன்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், கட்சிக்காக போஸ்டர் ஓட்டி உழைத்தவர்களின் நிலை என்ன ஆவது?” என்றார்கள்.

விஜயபாஸ்கர் தரப்பினரோ, யாரும்  யாரையும் ஓரங்கட்டவில்லை. ஊழல் தொடர்புடையவர்கள் என்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. தீர்ப்பு இன்னும் வரவில்லை. எனவே, விஜயபாஸ்கரை ஊழல்வாதி என்று சொல்வது தவறானது. தவிர, விஜயபாஸ்கர் போன்ற அனுபவசாலிகள் மாவட்ட நிர்வாகிகளை அரவணைத்து, ஒருங்கிணைத்து வழிநடத்துவதில் என்ன தவறு இருக்கிறது. கட்சி வேலை பார்க்கத்தானே விஜயபாஸ்கர் த.வெ.க.வுக்கு வந்திருக்கிறார். தவிர, அமைச்சர் பர்வேஸும், விஜயபாஸ்கரும் இணைந்துதான் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள்.

நெருப்பின்றி புகையாது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *