முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவர் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அடுத்த நாளான 26-ம் தேதி எ.வ.வேலு சிங்கப்பூர் சென்றார்.
இதனிடையே நேற்று முன்தினம் (ஜுலை. 10) கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய், “கைதுக்குப் பயந்து ஒருத்தர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். உடனே ஸ்டாலின் சார் என நினைக்காதீர்கள். எனக்கு ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு. வேறு ஒருத்தர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாரே… அவரைச் சொன்னேன்” என்று எ.வ வேலுவை மறைமுகமாகச் சாடியிருந்தார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய எ.வ வேலு செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
“ஓடுவது, ஒளிவது, பதுங்கும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் எங்களை அப்படி வளர்க்கவில்லை.
அரசியலை அரசியலாகச் சந்திக்க திமுக என்றும் தயங்கியதில்லை. 2016-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதயம் தொடர்பான சிகிச்சை பெற்று வருகிறேன். 2016-ம் ஆண்டு முதன் முறையாக நான் அங்கு சென்று சிகிச்சை பெற்றேன். அதன் பிறகு தொடர்ந்து அங்கு சென்று வருகிறேன்.