தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில் முதல்வர் விஜய் பேசிய உரை பேசுபொருளானது. இந்த நிலையில், தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் விசிக-வின் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு “ஒரு கிராம் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.