கோயில் வழிபாட்டைத் தொடர்ந்து, அமராவதியில் உள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் விஜய்யை, சந்திரபாபு நாயுடு, அவரது மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் மற்றும் அமைச்சர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நேரில் வரவேற்றனர்.
தொடர்ந்து, ஆந்திர அமைச்சர்களான நிம்மலா ராமநாயுடு, நாராயணா மற்றும் எம்.பி. ஸ்ரீனிவாசலு ரெட்டி ஆகியோரை விஜய்க்கு சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார்.
மாலை 6:00 மணி முதல் நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையிலான கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டம், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் நீர்த் திறப்பு உள்ளிட்ட முக்கிய நீர்சார் விவகாரங்கள் குறித்து இரு முதல்வர்களும் விரிவாக விவாதித்தனர்.
இச்சந்திப்பில் தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட இரு மாநில உயர்மட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.