சிறுவயதிலிருந்தே ஆர்வம்
என் பேரு சண்முகம். நான் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூரில் வசிக்கிறேன்.
எனக்கு சின்ன வயசுல இருந்தே கபடி,ஓட்ட போட்டியில பெரிய ஆர்வம் இருந்துச்சு.
ஆனா என்னோட பள்ளிக்கூட படிப்ப கூட இரண்டாம் வகுப்புக்கு மேல தொடர முடியல. அந்த அளவுக்கு வறுமை எங்கள வாட்டுச்சு. படிப்புதான் நின்னதே தவிர, மனசுல இருந்த விளையாட்டு வெறி மட்டும் போகவே இல்ல.எனக்கு தினமும் செய்தித்தாள் படிக்கிற பழக்கம் உண்டு. அதுல விளையாட்டுப் பக்கத்தைத்தான் மொதல்ல புரட்டுவேன். பல சர்வதேசப் போட்டிகள்ல ஜெயிச்சு, நம் நாட்டுத் தேசியக் கொடிய மார்போட அணைச்சுக் கம்பீரமாப் புடிச்சுக்கிட்டு, போஸ் கொடுப்பாங்களே அந்த புகைப்படங்களை பேப்பர்ல பாக்குறப்போ என் மனசுல அப்படி ஒரு சந்தோஷம் வரும். வாழ்க்கையில ஒரு நாளாவது இப்படி நாமளும் ஜெயிச்சு நம் நாட்டு தேசிய கொடிய புடிச்சு நின்னு போஸ் கொடுக்கணும்னு நினைப்பேன்.
ஆனா என் வீட்டு வறுமை என்ன அதை நோக்கி பயணிக்க விடல. வயித்துப் பாட்டுக்காக தறி ஓட்டப் போனேன், நெசவுத் தொழில்ல இறங்கினேன். கல்யாணம் ஆச்சு, புள்ளைங்க பொறந்ததுங்க. அவங்கள காப்பாத்தணும், கரையேத்தணும்ங்கிற ஓட்டத்துலயே பல வருஷங்கள் ஓடிப்போச்சு. என் சொந்தக் கனவெல்லாம் மனசுக்குள்ளேயே புதைஞ்சு போய்க் கெடந்துச்சு.

கொரோனாவால் சூடு பிடித்த கனவு
கொரோனா என் வாழ்வில் ரொம்ப பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. நான் ஈரோட்டுக்குப் பக்கத்துல சத்திரம்ங்கிற ஊர்லதான் தறி ஓட்டப் போயிட்டு இருந்தேன். நோய் பரவுதுன்னு அங்கியும் வேலைக்கு வர வேணாம்னு கைவிரிச்சுட்டாங்க. கையில காசில்ல, என்ன பண்றதுன்னு தெரியாம ஒருநாள் வெறுத்துப் போய், கம்மாய்க் கரைப் பக்கம் சும்மா வேடிக்கை பாக்கப் போயி உக்காந்திருந்தேன். அங்க சில வாலிபப் பசங்களும் சின்னப் பசங்களும் ஓட்டப் போட்டிக்குத் தீவிரமா ஓடிப் பயிற்சி எடுத்துட்டு இருந்தாங்க. அதைப் பாத்ததும் எனக்குள்ள ஏதோ பண்ணுச்சு.
நாமளும் இவங்களோட ஓடிப் பாத்தா என்ன? னு தோணுச்சு. அவங்களோட நானும் ஓட ஆரம்பிச்சேன்.அங்கு உள்ள இளைஞர்களை விட நான் நல்லா ஓடுறத பார்த்து வியந்து அங்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த கவுந்தப்பாடி புதூர் காவல் நிலையம் தலைமை காவலர் சரவணன் என்பவர் எனக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சாரு. கண்மாய்க்ரைப்பக்கம் ஓடிக்கிட்டு இருந்த என்னை அழைத்து கவுந்தப்பாடி புதூர் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சாரு.

அன்னையிலிருந்து தினந்தோறும் என்னை பயிற்சிக்கு வரச் சொல்லி பயிற்சி அளித்து என்னை முதன் முதலில் மதுரையில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஓட்ட போட்டியில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றார். அந்த போட்டியில் கலந்துக்கிட்டு தங்கப்பதக்கம் வாங்கி வந்தேன். அந்த நாள் என் வாழ்க்கைல மறக்க முடியாத நாளாக இருந்துச்சு.
சர்வதேச அளவில் ஒரு தங்கம் இரு வெள்ளிப் பதக்கங்கள்
பிறகு தொடர்ந்து மாநில அளவில் பல போட்டிகளில் வென்று வந்தேன் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் என்ன பார்த்துட்டு அவரும் பயிற்சி கொடுத்தார். பின் தேசிய அளவில் கொல்கத்தாவில் நடந்த 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வாங்கி வந்தேன். இதற்கு முழு செலவையும் என்னால பார்த்துக் கொள்ள முடியல. பின் ஊர் மக்கள் எல்லாரும் ஒன்று கூடி எனக்கு நிதி உதவி அளித்து என்னை அனுப்பி வெச்சாங்க.

பின் இதன் அடுத்த கட்ட சர்வதேச அளவில் ஆசிய மாஸ்டர்ஸ்(ASIAN MASTERS ATHLETICS CHAMPIONSHIPS) போட்டிக்கு தேர்வானேன். அதிர்ஷ்டவசமா அது நான் கலந்து கொண்ட வருடமான 2025 ஆண்டில் போட்டியானது சென்னையிலேயே நடந்தது. அதில் ஒரு தங்கம் மற்றும் இரு வெள்ளி பதக்கத்தை வென்று வந்தேன் .அன்று தங்கப்பதக்கம் வென்று நம் இந்திய தேசியக் கொடியை பிடித்து போட்டோ எடுக்கும் போது என் வாழ்வில் அளவு கடந்த இன்பத்தை பெற்றேன். சிறுவயதில் இருந்து எனக்கு இருந்த அந்த லட்சிய கனவு நனவானது.
அந்த முப்பது, நாற்பது வருஷக் கனவு என் கண் முன்னாடி நனவா நின்னுச்சு. ஊருக்குள்ள நான் கால் எடுத்து வெச்சப்போ, மேளதாளம் முழங்க, மாலை மரியாதையோடு மக்கள் எனக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தாங்க. ஒரு நெசவுத் தொழிலாளியான என்னை ஊரே தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடுன அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த இந்த உலகத்துல வார்த்தைகளே கிடையாது.