ஒரு தவறுக்குப் பிறகு… மூன்று பேர்டிகள்!
மூன்றாவது ஹோலில் ஏற்பட்ட தவறுக்குப் பிறகு பிரணவி செய்தது ஒரு சாம்பியனின் பதில். அடுத்தடுத்த ஹோல்களில் பேர்டிகளைப் பதிவு செய்து, தான் இன்னும் போட்டியில் இருப்பதை நிரூபித்தார். ஆறாவது ஹோலில் கிடைத்த பேர்டி அவருக்கு சற்றே மூச்சுவிடும் இடத்தைக் கொடுத்தது. பத்தாவது ஹோலில் கிடைத்த பேர்டி, மீண்டும் முன்னணி வீராங்கனையான சீனாவின் யின் ருவோனிங்குடன் அவரை சமநிலைக்கு கொண்டு வந்தது. ஆனால், போட்டியின் திருப்புமுனை 13வது ஹோல்.
பந்து விளிம்பைச் சுற்றி வந்து ஹோலுக்குள் விழுந்த அந்த நொடியில், பிரணவியின் முகத்தில் மீண்டும் நம்பிக்கை மலர்ந்தது. அந்த பேர்டி அவரை மீண்டும் 15-அண்டர் நிலைக்குக் கொண்டு சென்றது. அதன்பிறகு அவர் அந்த முன்னிலையை விட்டுக்கொடுக்கவே இல்லை.
கடைசி புட்… சில நொடிகள் நீண்ட நித்தியக் காத்திருப்பு!
கடைசி ஹோல்,கையில் இருந்த புட்டர் முன்னிலையில் இருந்தாலும், அந்த ஒரு ஷாட் போட்டியின் முடிவை தீர்மானிக்கக்கூடியது. பந்து ஹோலை நோக்கிச் சென்று உள்ளே விழுந்தது. ஆனால், வெற்றி பெற்றுவிட்டோம் என்ற உணர்வு பிரணவிக்கு உடனடியாக வரவில்லை.
அவருடைய எதிரணி வீராங்கனையான ஷானன் டான் “நன்றாகச் செய்தாய்” என்று கூறிய பிறகுதான், உண்மையில் தங்கம் தன்னுடையது என்பதை அவர் உணர்ந்தார். அந்தச் சில நொடிகள் அவருடைய வாழ்க்கையின் மிக நீண்ட நொடிகளாக இருந்திருக்கலாம்.
நான்கு நாட்கள், 72 ஹோல்கள், 265 ஸ்ட்ரோக்குகள், 15-அண்டர் : இறுதியில் — தங்கம்.
பிரணவியின் வெற்றி ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் கோல்ஃப் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.
மேலும், 2002ஆம் ஆண்டு ஷிவ் கபூர் ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான தனிநபர் கோல்ஃப் தங்கத்துக்காக நீண்ட 24 ஆண்டுகள் காத்திருந்த நிலைக்கும் இந்த வெற்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
1982ஆம் ஆண்டு லட்சுமண் சிங் ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தற்போது, பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்திய மகளிர் கோல்ஃப் வரலாற்றில் பிரணவி ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கிறார்.
பிரணவியின் தனிநபர் தங்கத்துடன் இந்திய மகளிர் கோல்ஃப் அணிக்கும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி மறக்க முடியாததாக மாறியது. பிரணவி உர்ஸ், அதிதி அசோக், தீக்ஷா டகர் ஆகியோர் இணைந்த இந்திய அணி மகளிர் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இறுதிச் சுற்றில் அதிதி அசோக்கின் 67 ஸ்ட்ரோக் ஆட்டமும் இந்தியாவின் பதக்க வேட்டைக்கு வலு சேர்த்தது. குறிப்பாக கடைசி ஒன்பது ஹோல்களில் அவர் தொடர்ச்சியாக ஆறு பேர்டிகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.