Junior Vikatan – 17 June 2026 – “விழிச்சவால் மாற்று திறனாளிகளான மனைவியும் குழந்தைகளும் பாதுகாப்பா இருக்க ஒரு நல்ல வீடு வேணும்…” | Pollachi marimuthu story of Visually impaired wife and children

Spread the love

மனைவி, இரண்டு குழந்தைகள் என மூன்று விழிச்சவால் மாற்றுத்திறனாளிகளைக் காப்பாற்ற, போதிய அடிப்படை வசதிகளும், வருமானமும் இல்லாமல் தவிக்கும் ஒரு கூலித் தொழிலாளியின் துயரம் கலங்கடிக்கிறது!

கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகே, கேரள எல்லையோரத்தில் அமைந்திருக்கிறது மீனாட்சிபுரம் கிராமம். இதற்கு அருகேயுள்ள கணபதிபாளையம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவரின் மனைவி சித்ரா (33), மகள் உத்ரா தேவி (9), மகன் ஹரிதாஸ் (7) மூன்று பேருமே விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள். தென்னை மரமேறி தேங்காய் பறிக்கும் கூலித் தொழிலாளியான மாரிமுத்துவின் ஒற்றை வருமானமே, மொத்தக் குடும்பத்துக்குமான வாழ்வாதாரம். ஏழ்மைக்குள் சிக்கித்தவிக்கும் மாரிமுத்துவின் குடும்பம், கழிவறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்பட்டுவருகிறது.

மாரிமுத்துவின் துயர நிலையைக் கேள்விப்பட்டு, அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக ஒரு பக்கம் மண் சுவரும், மற்ற பக்கங்களில் தென்னந்தடுக்குகளாலும் அமைக்கப்பட்ட குடிசை வீடு நம்மை வரவேற்றது. பத்துக்குப் பத்து என்ற அளவிலான ஒரே அறைக்குள்தான் மொத்தக் குடித்தனமும் நடக்கிறது. அதிலும் பாதி இடத்தை, வீட்டில் இருக்கும் பொருள்களே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் விழிச்சவால் மாற்றுத்திறனாளி குழந்தைகளை, குடிசையின் ஓட்டை வழியாக வரும் விஷப்பூச்சிகள் தீண்டி விடுமோ என்ற அச்சத்துடன் பரிதவித்துக் கொண்டிருந்தார் சித்ரா.

மாரிமுத்து குடும்பத்தினர்...

மாரிமுத்து குடும்பத்தினர்…

இரண்டு குழந்தைகளையும் அரவணைத்தபடி பேசிய சித்ரா, “எனக்கு கிட்டப்பார்வை. தொண்ணூறு சதவிகிதப் பார்வை இல்லை. என் குழந்தைங்க ரெண்டு பேருக்கும் நூறு சதவிகிதம் பார்வை இல்லை. என் கணவர் தோட்டங்கள்ல இளநீர் வெட்டுற வேலைக்குப் போறாரு. அந்த வேலை பத்து நாள் இருக்கும்; அஞ்சு நாள் இருக்காது. எங்களுக்குன்னு நிலையான வேலை, வருமானம் இல்லை. அதனால ரொம்பக் கஷ்டப்படுறோம். எனக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மாசம் ஆயிரத்து ஐந்நூறு ரூபா வருது. ஆனா, என் குழந்தைகளுக்கு அதுவும் இன்னும் கிடைக்கலை.

கலெக்டருக்குப் பல தடவை மனு குடுத்தும் பட்டா கிடைக்கலை. இருக்க ஒரு நல்ல வீடு இல்லை. மழை வந்தா வீடு முழுக்க ஒழுகும்; பூச்சிகளும் வரும். அதனால நிம்மதியா தூங்கக்கூட முடியாது. எங்களுக்கு உதவ வேற யாரும் இல்லை. என்னால தனியா எங்கேயும் போயிட்டு வர முடியாது. எங்க போகணும்னாலும் கூட ஒரு துணை வேணும். கணவரா இருந்தாலும் எல்லா இடத்துக்கும் கூட வர முடியாதுதானே… அதுலயும் பாத்ரூம் இல்லாம, வெளியில போயிட்டு வர ரொம்ப சிரமப்படுறோம்” என்றார் வேதனையுடன்.

“நான் தொண்டாமுத்தூர் பக்கத்துல இருக்குற உலியம்பாளையம் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளிக்கூடத்துல படிக்கிறேன். இந்த வருஷம் நான் அஞ்சாவது போறேன். தம்பி மூணாவது போறான். நானும் தம்பியும் ஹாஸ்டல்ல தங்கி படிச்சிக்கிட்டு இருக்கோம். விசேஷம், லீவுன்னாதான் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வருவாங்க. அம்மா, அப்பாவைப் பிரிஞ்சு இருக்கறது கஷ்டமாதான் இருக்கு. ஆனா படிக்கணுமே… நான் நல்லா படிப்பேன், நல்லா பாடுவேன். மியூசிக் டீச்சர் ஆகணுங்கிறதுதான் என் ஆசை. எங்களுக்குன்னு ஒரு வீடு இருந்தா நல்லா இருக்கும்” என அந்த சின்னஞ்சிறிய உலகத்துக்குள் இருக்கும் தனது பெரிய கனவைப் பகிர்ந்தார், உத்ரா தேவி.

வேலை முடிந்து சோர்வோடு வந்த மாரிமுத்து, தன்ன கஷ்ட வாழ்க்கையைப் பகிர்ந்தார். “நான் மரம் ஏறி தேங்காய் போடுற வேலைக்குப் போறேன். அதை வெச்சுதான் எல்லாரையும் காப்பாத்துறேன். ஆனா, எல்லா நாள்களும் எனக்கு வேலை கிடைக்காது. தெம்பு இருக்குற வரைக்கும் என்னால வேலை செய்ய முடியும்.

மாரிமுத்து

மாரிமுத்து

என் ரெண்டு குழந்தைங்களுக்கும் இப்பிடிப் பார்வை இருக்காதுன்னு நாங்க நினைக்கலை. குழந்தைங்க பிறந்ததும் நிறைய ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு போய் காட்டினோம். பிறவியிலேயே பார்வை இல்லாததுனால, ஆபரேஷன் பண்ணினாலும் பார்வை வராதுன்னு சொல்லிட்டாங்க. இங்க வீட்டுல எந்த வசதியும் இல்லை. அதனாலதான் குழந்தைங்களை ஹாஸ்டல்ல விட்டுட்டோம்.

வீட்டுல பாத்ரூம் இல்லாததுனால மலம் கழிக்க குளத்துப் பக்கம் போகவேண்டியிருக்கு. எனக்குப் பிரச்னை இல்லை. ஆனா அவங்களுக்குப் போயிட்டு வர்றதுல நிறைய சிரமம் இருக்கு. அதனால பாத்ரூம் கட்ட குழி எடுத்து வெச்சுட்டேன். மேல கட்ட பணம் இல்லாததனால, அந்த வேலை அப்பிடியே நிக்குது. என் குழந்தைங்க பாதுகாப்பா இருக்க ஒரு நல்ல வீடு வேணும். அதுக்கும், என் குழந்தைங்க படிக்கவும் எங்களுக்கு யாராவது உதவி பண்ணினா நல்லா இருக்கும்” எனத் தன் துயரத்தைக் கண்ணீராக வடித்தார்.

துயரத்தில் சிக்கியிருக்கும் இந்தக் குடும்பத்துக்குத் தேவையான உதவிகள் கிடைக்குமா?

Name : CHITRA
Acc. No : 61352230000408
Bank : CANARA BANK
Branch : ATHU POLLACHI
Ifsc : CNRB0016135

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *