ORS பாக்கெட்டுகளுக்காக 2 நாளாக காத்துக் கிடக்கும் மக்கள்; அலட்சியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

Spread the love

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வாட்டி வருகிறது. வெயில் ஒவ்வாமையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உடலில் நீர் இழப்பைத் தவிர்த்து உயிர் காக்கும் மருந்தான ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Salt) மருந்துகளை போதுமான அளவில் இருப்பு வைக்குமாறு சுகாதாரத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில் உள்ள ராஜன் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக ஓ.ஆர்.எஸ்‌‌ கலவை இல்லை என நோயாளிகளை திருப்பி அனுப்பி வருவதால், உள்ளுர் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ராஜன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

ராஜன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

இது குறித்து தெரிவித்த நோயாளிகள் சிலர், “வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட காரணங்களால் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. ஓ.ஆர்.எஸ் பவுடர் இல்லை என இரண்டு நாள்களாக எங்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இரு தினங்களாக வெகு நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

இது குறித்து தெரிவித்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், “சத்தியமங்கலத்தில் இருந்து ஸ்டாக் கொண்டுவர வேண்டியுள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ் பவுடர்களை வாங்கிக் கொள்ளுமாறு அனுப்பி வைக்கிறோம்” என்றனர், அலட்சியமாக.

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் பவுடர்கள் இருப்பு வைத்திருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உள்ளுர் மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *