`மட்டன் போடுவதாக சொல்லிவிட்டு சிக்கன் போட்டுவிட்டார்கள்'- பீகார் திருமணத்தில் வன்முறை; 12 பேர் காயம்

Spread the love

திருமண வீட்டில் சாப்பாடு சரியில்லை என்றால் விருந்தினர்கள் டென்ஷாகிவிடுவது வழக்கம். அவர்களை சமாதானப்படுத்துவது திருமண வீட்டுக்காரர்களுக்கு பெரிய சவாலாக மாறிவிடும். பீகாரில் திருமண வீட்டில் மட்டன்(ஆட்டுக்கறி) விருந்து வைப்பதாக மணமகன் வீட்டாரிடம் மணமகள் வீட்டார் உறுதியளித்து இருந்தனர். ஆனால் ஆட்டுக்கறிக்கு பதிலாக கோழிக்கறி பரிமாறப்பட்டதால் ஏற்பட்ட மோதல் திருமண விழாவை வன்முறைக்களமாக மாற்றியது. பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூர் நகரைச் சேர்ந்த மணமகன் வீட்டார், மஹிஷி பிளாக்கில் உள்ள ராஜன்பூர் கிராமத்திற்குத் திருமணத்திற்கு வந்திருந்தபோது இச்சம்பவம் நடந்தது.

திருமணம் எந்த வித பிரச்னையும் இன்றி நடந்தது. திருமணம் முடிந்து மதிய உணவு தொடங்கியபோதுதான் பிரச்னை ஆரம்பித்தது. விருந்தில் ஆட்டுக்கறி விருந்துக்கு பதில் கோழிக்கறிக்கறி பரிமாறப்பட்டது. இதைப்பார்த்ததும் மணமகன் வீட்டார் டென்ஷனாகிவிட்டனர்.

ஆட்டுக்கறி விருந்து கொடுப்பதாக சொல்லிவிட்டு கோழிக்கறி விருந்து கொடுப்பதாக கூறி மணமகள் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் உக்கிரமடைந்து, இருதரப்பினருக்கும் இடையே கடுமையான கைகலப்பாக மாறியது.

அங்கிருந்தவர்கள் தடிகள் மற்றும் வாள்களை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. சத்தமான கூச்சல்களுக்கு மத்தியில், ஒரு கும்பல் கம்பால் திருமண விருந்தினர்களைக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. ஒரு வீடியோவில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பை அச்சுறுத்துவதற்காக காற்றில் வாள்களை வீசி மிரட்டுவதைக் காண முடிகிறது. இது அங்கிருந்த மற்ற விருந்தினர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

திருமண மேஜை, நாற்காலிகள் தலைகீழாகக் கவிழ்க்கப்படுவதும், உணவுத் தட்டுகள் உடைக்கப்படுவதும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடுவதும் வீடியோவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இந்தத் தாக்குதலில் மணமகனின் மாமா முகமது இர்பான் உட்பட மணமகன் வீட்டைச் சேர்ந்த 6 முதல் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிம்ரி பக்தியார்பூர் துணைப் பிரிவு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *